மதுரையில் இயங்கும் நிறுவனம்
மதுரை மாநகர் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ் என்ற தம்பதியினர் கடந்த 6 ஆண்டுகளாக TUCKER MOTORS PVT LTD என்ற இ - கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சார்ஜிங் ஸ்டேசன்கள் முழுவதும் சாப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்ராஜ் பிராகல்யா தம்பதியினரின் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த சிவா என்ற மென்பொருள் பொறியாளரை தங்களின் TUCKER MOTORS நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர்கள் மற்றும் ஹார்டுவேர்களை திருடி சென்று விட்டதாக சில தினங்களுக்கு முன்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மென் பொறியாளர் புகார்
இந்நிலையில், TUCKER மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணினி மென்பொருள் பொறியாளாரான சிவா, டக்கர் மோட்டார் நிறுவன இயக்குநர்களான மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா தம்பதியினர் தன் மீது தவறான பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
சீனா நிறுவனம் கூட இயக்கலாம்
இதனைத்தொடர்ந்து பேசிய சிவா, “டக்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பாகங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்பு இல்லாமலும் எளிதில் தீப்பற்ற கூடியதாகவும் இருப்பதால் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகுவதாக நான் அவர்களிடம் கூறியதன் காரணமாக நானாகவே நிறுவனத்தில் இருந்து பணியில் இருந்து வெளியேறினேன். மேலும் அந்த நிறுவனத்தில் கல்லூரிகளில் இருந்து அழைத்துவரக்கூடிய மாணாக்கர்களை பயிற்சி அளிப்பதாக கூறி உரிய பயிற்சி பெறாத மாணாக்கர்கள் மூலமாக சார்ஜிங் ஸ்டேஷனுக்கான பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்கள் சாதாரணமாக சீனாவில் உள்ளவர்கள் கூட எளிதாக இயக்க கூடிய அளவிற்கு பாதுகாப்பற்றது. தான் நிறுவனத்தில் பணிபுரிந்து வெளியேறிய பின்பாக அவர்களுக்கு போட்டியாக தொழில் தொடங்கி விடுவேன் என்ற அச்சம் காரணமாக தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். இதுபோன்று பொய்யான புகார் அளித்த நிலையில் தனது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பெரிய நிறுவனத்தில் என்னை மட்டும் நம்பி எப்படி அனைத்து SOFTWARE மற்றும் ஹார்டுவேர்கள் கொடுக்க முடியும், அப்படி என்றால் பாஸ்வேர்டை அவர்களே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் எனவும் உடனடியாக பணிக்கு வராவிட்டால் கூலியாட்ககள் மூலமாக தூக்கி விடுவோம் என தனது அத்தையிடம் மோகன் ராஜன் மனைவி மிரட்டி பேசியதாகவும் தெரிவித்தார். என் மீது பொய்யான புகார் அளித்த மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் எனவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: "கவலப்படாதீங்க நான் உங்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுத்துத்தறேன்" - ரூ.49 ஆயிரம் அபேஸ் !