வரிமுறைகேடு விவகாரம் - மேயரை விசாரணைக்கு உட்படுத்தாமல் அரசு அலட்சியம் -  பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மேயர் இந்திராணி பெயரை கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு சூட்டக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்த சமூக ஆர்வலர்.

Continues below advertisement

மதுரை மாநகராட்சி விவகாரம் மதுரையில் 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையில் உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகள் குழு நியமித்தது. வரி முறைகேடு தொடர்பாக முதல் குற்றவாளியாக மாநகராட்சி மேயர் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் ஜாமினில் உள்ளனர்.

குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி வரி வசூல் குறைப்பு செய்யப்பட்டது, விசாரணையில் தெரிய வந்தது. வரி முறைகேடு விவகாரத்தில்  மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மேயர் இந்திராணி தனது பதவியை குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்ததை அடுத்து துணை மேயர் நாகராஜன் பொறுப்பு மேயராக பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் முறைகேடு விவகாரம் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் முன்னாள் மேயர் முத்துவின் பெயரை மேம்பாலத்திற்கு வைத்தது போல மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு முன்னாள் மேயர் இந்திராணியின் பெயரை சூட்டக் கோரி, மதுரை செல்லூரை சேர்ந்த மனுநீதி மக்கள் நல இயக்க தலைவர் சங்கர பாண்டியன் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

Continues below advertisement

கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் இது குறித்து பேசிய சங்கரபாண்டியன் மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடுவிவகாரத்தில் மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார். எனவே அவர் மீது புகார் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்று குற்றச்சாட்டிற்கு பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்ததை பாராட்டி மேம்பாலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தார். மதுரையில் முன்னாள் மேயர் இந்திராணியின் பெயரை கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என வஞ்சபுகழ்ச்சியுடன் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது