நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், தவெக அரசின் காவல்துறையை கண்டித்தும் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட SFI, DYFI அமைப்பினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துசென்று கைது செய்ததால் பரபரப்பு.

 
டெல்லி போராட்டம்
 
டெல்லியில் போராடிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திா பிரதான் பதவி விலகக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரையும், மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்திற்குள் சென்று மாணவர்களை கைது செய்த, தமிழக காவல்துறையினரை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
 
போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழக காவல்துறையினரை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைகளில் செல்போன் டார்ச்லைட்டுகளை எரியவிட்டபடியும், நீட் தேர்வுக்கு எதிரான பாடல்களை பாடியபடியும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாதர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
போராட்டத்திற்கு  அனுமதி இல்லை
 
ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் காத்திருப்பு போராட்டத்திற்கு  அனுமதி இல்லை என கூறி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாதர் சங்கத்தினரை தரதரவென இழத்துசென்றும், தூக்கிசென்றும் கைது செய்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைகளை பிடித்து இழுத்து கைது செய்த போது போராட்டக்காரர்களும் கைது செய்ய விடாமல் போராடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்து ஆட்டோவிற்கு 10க்கும் மேற்பட்டோரை ஏற்றி நெருக்கடி கொடுத்ததால் அதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வகுப்பறைக்குள் சென்று கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டீலன் உள்ளிட்ட மூன்று பேரும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில்  ஈடுபட்ட நிலையில் மூவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்றதோடு கழுத்தை நெறித்து ஆட்டோவிற்கு தள்ளி ஏற்றி கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி பொன்னுத்தாய் பேசும்போது
 
தமிழக முதலமைச்சர் விஜய் ஜனநாயகன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜனநாயகத்தை நிலைநாட்ட மறுக்கிறார். முதலமைச்சர் நீட் தேர்வு குறித்து வாய் திறக்காத்தை மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். சினிமாவில் நடிப்பது தமிழக அரசியல் கிடையாது. நீட் தேர்வை ரத்து செய்வதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
 
கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத்தினர் கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் தங்களது கைகளை கடிப்பதாக குற்றம் சாட்டினர்.