ஆலமரத்திற்கு 105ஆவது பிறந்தநாள்... கட்டிப்பிடித்து கொண்டாடிய மதுரை மக்கள்

ஆலமரத்தை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து பாடல்பாடி கைதட்டி வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்.

Continues below advertisement
ஆலமரத்தை சுற்றி நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இயற்கை ஆர்வலர்கள்
 

நூறு ஆண்டு ஆலமரம்

 
மதுரை மாநகர் மீனாட்சிபுரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்தது. இவைகள் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பூங்கா அமைப்பு காரணமாக அகற்றப்பட்டது. இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரே ஒரு ஆலமரம் மட்டும் நூறு ஆண்டுகளை கடந்தும் இருந்துவருகிறது. இந்த ஆலமரம் ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாக இருப்பதோடு, காக்கை, புறாக்கள், குயில்கள் ஆகிய பறவைகள் கூடுகள் கட்டிவசித்துவருகின்றது. மேலும் இந்த ஆலமரம் அந்த பகுதி மக்களின் நிழலோடு இளைப்பாறும் இடமாகவும், நினைவுகளை பகிரும் அடையாளமாகவும் இருந்துவருகிறது. இந்நிலையில் நூற்றாண்டை கடந்த நாட்டின் தேசிய மரமான ஆலமரத்தை பாதுகாக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாவனை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
 

ஆலமரத்தை கட்டிப்பிடித்து கொண்டாட்டம்

 
இந்நிலையில் உலக இயற்கை வள பாதுகாப்பு நாளான இன்று மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 105 -வது பிறந்த நாள் இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் ஆலமரத்தை கட்டிபிடித்தும், கைதட்டியும், பிறந்தநாள் வாழ்த்தோ பாடல் பாடியும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனையடுத்து நாட்டு இன மரங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அரிய வகை மரக்கன்றுகளை வழங்கி அதனை கண்மாய்க் கரைகளில் நடவைத்தனர். இதனைத்தொடர்ந்து மனித வாழ்வில் மரங்களின் பயன்கள் குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் அனைத்த தரப்பினருக்கும் உணர்த்தும் வகையிலும், ஆலமரம் உள்ளிட்ட அனைந்து வகையான நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டது.
 

மக்களின் அடையாளம்

 
இந்த பிறந்தநாள் விழாவின் போது ஏராளமான பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களும் 105ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ஆலமரத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். நன்கு வளர வேண்டும், நிழல்தர வேண்டும் மரத்தை சுற்றிலும் கைகளை கோர்த்தப்படி கைதட்டி வாழ்த்தியபடி தண்ணீரை ஊற்றி வாழ்த்து தெரிவித்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 105ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ள இந்த ஆலமரம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்ற முயன்றபோது, பல்வேறு போராட்டங்களை சந்தித்து இன்றளவும் அப்பகுதி மக்களின் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. வாழ்வின் நினைவகளிலும் நீங்கா இடைத்தை பிடித்துள்ளதால் மனிதர்களுக்கு கொண்டாடப்படுவது போல வண்ண, வண்ண விளக்குகள் கட்டப்பட்டும்,  ஒலிப்பெருக்கி மூலமாக பாடல் போடப்பட்டும் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மரத்திற்கு பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்படுவதை பார்த்து, பர்த்டே ஆலமரத்தின் முன்பாக நின்றுகொண்டு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இயற்கை வள பாதுகாப்பு நாளில் இதுபோன்று தேசிய மரமான ஆலமரத்திற்கு பிறந்தநாள் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது, எனவும் இதுபோன்ற மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும், என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola