முகூர்த்த நாள் என்பதால் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நானே செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. தலைவராக இருந்ததால் சென்றேன். - நயினார் நாகேந்திரன்.

யாரும் வெளியேறுவதற்கு நான் காரணமாக முடியாது.
 
மதுரை தெப்பக்குளம் பகுதியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்..,” டிடிவி தினகரன் மீது எனக்கு என்றும் மதிப்புண்டு. 2021 சட்டமன்ற தேர்தலில் சசிகலா, டிடிவி இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என சொன்னவன் நான். அந்தளவுக்கு அவர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். அமித்ஷா யாரை முதலமைச்சர் என சொல்கிறாரோ அவருக்காக வேலை செய்ய தயார் என சொன்னவர் தினகரன். அவருக்கு ஏற்பட்ட வருத்தத்தை தேசிய தலைமையுடன் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சூழ்நிலைகள் காரணமாக தினகரன் வெளியேறுவதற்கு நான் பொறுப்பாக முடியாது. அதிமுகவை பொறுத்தவரை எனக்கு எல்லோரும் நண்பர்கள், எனவே யாரும் வெளியேறுவதற்கு நான் காரணமாக முடியாது.  தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேச தயாராக இருக்கிறேன். நிச்சயமாக சமரச பேச்சுவார்த்தை நடக்கும்.
 
செங்கோட்டையன் நகர்வுகளுக்கு பாஜக காரணம் அல்ல
 
அமித்ஷா முன்னிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என அண்ணாமலை கூட பேசியிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி தான் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். அண்ணாமலை கூட்டணியை சரியாக கையாண்டார் என சொல்லும் தினகரன் இதற்கு என்ன பதில் சொல்வார்? திமுக ஆட்சியில் இருக்க கூடாது என உண்மையாக நினைத்திருந்தால் தினகரன் வெளியே போயிருக்க மாட்டார். அதிமுகவை முன்வைத்து நடக்கும் பிரச்னைகளுக்கு அண்ணாமலை எப்படி காரணமாக இருப்பார்? அவர் எங்களுடைய கட்சி. செங்கோட்டையன் நகர்வுகளுக்கு பாஜக காரணம் அல்ல. யாருடைய பின்னாலும் பாஜக இல்லை. முகூர்த்த நாள் என்பதால் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நானே செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. தலைவராக இருந்ததால் சென்றேன். அண்ணாமலைக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.