மதுரை சுந்தர்ராஜன் பட்டியில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான அமைப்பின் கீழ் செயல்படும் பார்வையற்றோருக்கான பயிற்சிப் பள்ளிக்கு இந்தியன் வங்கியின் சார்பில் சமூகப்பொறுப்பு நிதியிலிருந்து 25 கம்ப்யூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நிகழ்வில் கலந்து கொண்டு இந்திய வங்கியின் சார்பில் பார்வையற்றோர் பயிற்சிப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் சாதனங்களை வழங்கி நிகழ்வை துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பார்வையற்றோர் அமைப்பின் கீழ் செயல்படும் பார்வையற்றோருக்கான புத்தகங்களை வடிவமைப்புச் செய்யும் ப்ரெய்ல் அச்சகம் மற்றும் பார்வையற்றோர் பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலை பார்வையற்றோர் படிக்கும் ப்ரெய்ல் மொழியில் மொழியாக்கம் செய்திருந்தனர். மொழியக்கம் செய்யப்பட்டிருந்த நூலினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்டார், அதனை இந்தியன் வங்கியில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறனாளி பிரகாஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30,000க்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு கல்வி வழங்கி பல்வேறு அரசுத்துறைகளில், தனியார் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கி மிகுந்த அற்பணிப்போடு செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பார்வையற்றோருக்கான அமைப்பனரை பாராட்டுகளை தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் 19 இடங்களில் அலிம்கோ நிறுவனத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம் நடத்தினார்.
பிரதமர் மோடி அவர்களின் வாரணாசி தொகுதியில் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில் 20,600 மாற்றுத் திறனாளிகள் பங்கெடுத்துள்ளனர். அதுவே தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட்ட முகாமாக இருந்துவருகிறது. நான்கரை ஆண்டுகள் தொடர் முயற்சியாக மதுரையில் தனது முயற்சியில் 19 இடங்களில் விரிவான முகாம் நடத்தியதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 19, 800 மாற்றுத்திறனாளிகள் பங்கெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்த ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் முகாம் ஏற்பாட்டினையும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பினையும் குறித்து வெகுவாக பாராட்டி உரையாற்றியதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தான் எழுதிய வேள்பாரி நாவல் பார்வையற்றோருக்கான அமைப்பிற்கு நிறைய உதவிகளை செய்து வரும் துர்கா அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார். உயர்கல்விக்கடன் வழங்குவதில் தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டம் முதல இடம் வகிப்பதாகவும், அதில் மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் வழங்குவதில் இந்தியன் வங்கி முதல் இடம் வகிப்பதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மதுரை எம்.பி பார்வையை இழந்து சாதனை புரிந்த மகத்தான கலைஞர்களான சிறுவயதிலிருந்து பார்வையில்லாமல் இருந்து பார்வை கிடைத்த பிறகு பார்வையற்றோரின் உலகம் குறித்து நிழல்களின் உலகம் என்கிற நூலினை எழுதிய தேனி சீருடையான் அவர்கள் குறித்தும், 50 வயதிற்கு பிறகு கண் நோயால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்த பிறகு சிறுவயதில் பார்த்த மதுரை நினைவுகள் குறித்து ஓவியமாக வரைந்த மனோகர் தேவதாஸ் அவர்கள் குறித்தும், காலமும் இயற்கையும் பறித்ததை நம்முடைய முயற்சியால் மீண்டும் அதனை வெல்லமுடியும் என்று மாணவர்களிடையே மேற்கோள் காட்டி உரையாற்றினார். இந்நிகழ்வில் பார்வையற்றோருக்கான அமைப்பின் பொறுப்பாளர் அப்துல் ரஹீம், இந்தியன் வங்கியின் பொது மேலாளர் சுதாராணி மற்றும் பாலசுப்பிரமணியம், ராகவன் மற்றும் பார்வையற்றோர் பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கெடுத்தனர்.