மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதா அல்லது மேலும் விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதா? என்று விவாதம் நடைபெற்று வருகிறது. பிரதமர், தமிழக அரசால் மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது அரசியல் ஆதாயம் தேடி உள்ளதா? என்று சர்ச்சையாகி வருகிறது. ஈ.பி.எஸ்., முதலமைச்சராக இருந்தபொழுது மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரி பெற்று தந்ததை நாடு அறியும். அதேபோல அம்மா முதலமைச்சராக இருந்தபோது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிவித்தார். வந்தே பாரத் ரயில் திட்டம் தமிழகத்தில் தான் அதிகமாக நாம் பெற்றுள்ளோம். மெட்ரோ ரயில் திட்டத்தை அம்மா ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக கொண்டு வந்தது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஈ.பி.எஸ்., - வைத்த 9 கோரிக்கை
கோவைக்கு பாரத பிரதமர் வந்த பொழுது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை ஈ.பி.எஸ் வைத்துள்ளார். வளர்ச்சி திட்டங்களுக்கு விளம்பரம் தேடாமல் அந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கோரிக்கை வைத்து அதை சாதித்தும் காட்டுவார். இன்றைக்கு மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிக்கையை அனுப்பித்துள்ளது. இதில் 20 லட்சம் மக்களுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும் என சில காரணங்களை கூறிய திட்டத்திற்கு இன்னும் சில விபரம் தேவைப்படுவதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த அறிக்கையை கடந்த 14ஆம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி விட்டது. தமிழக அரசு இதை நிறுத்தி வைத்து, காத்திருந்து, பாரத பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சந்திக்கும் முன்தினம் அறிக்கையை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவது நோக்கம் அல்ல அதில் அரசியல் ஆதாயம் தேடுவது தான் நோக்கமாக உள்ளது.
மடைமாற்ற போராட்டம்
மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய விதிகளை உருவாக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் மெட்ரோ ரயில் திட்டத்தில் நிதியைப் பெற நகரத்தில் மக்கள் தொகை 20 லட்சம் இருக்க வேண்டும் அதற்கு மேலும் இருக்க வேண்டும் எனவும், விரிவான போக்குவரத்து ஆணையம் நிறுவ வேண்டும் என்றும், இணைப்பு வாகனம் வசதி கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு விதிகளை கொண்டு வந்தது. தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மக்கள் தொகை விவரம் சரியில்லையா? அல்லது மக்கள் தொகையின் தற்போது விவரத்தை இணைக்கவில்லையா என கேள்வி தான் எழுந்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு திருப்பி தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். இன்றைக்கு வளர்ச்சி திட்டங்களில் அரசியல் ஆதாயம் பெற திமுக அரசு தங்களின் இயலாமை மறைக்க, தங்களை இயலாமை மடைமாற்றம் செய்ய கோவை, மதுரையில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.