ஜனவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு மற்றும் வேள்வி பூஜைகளை தமிழில் நடத்தவும், தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்க உத்தரவிடக்கோரிய மனு. - பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

Continues below advertisement

உயர்நீதிமன்ற கிளையில் மனு

கோவையைச் சேர்ந்த சுரேஷ்பாபு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு...,” நான் சண்டீகேஸ்வரர் சேவை அறக்கட்டளை தலைவராக இருந்து வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வருகிறோம். பிரபல கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் போது வேள்வி குண்ட பூஜைகளுக்கு சமஸ்கிருத வேள்வி ஆசிரியர்கள் தான் அழைக்கப்படுகின்றனர். தமிழ் வேள்ளி ஆசிரியர்களை அழைப்பதில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் குடமுழுக்கு விழாக்களில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில்லை. இதையடுத்து தமிழக கோயில்களில் குடமுழுக்கு வேள்வி குண்ட நிகழ்வில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்கக்கோரிய வழக்கில் இது தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் திட்டத்தை உருவாக்க அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அந்த உத்தரவை அறநிலையத்துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. தற்போது கோயில் குடமுழுக்கு விழாக்களில் சமஸ்கிருத வேள்வி ஆசிரியர்களையே யோக குண்ட நிகழ்வுக்கு அழைக்கின்றனர். என்னைப்போன்ற தமிழ் வேள்வி ஆசிரியர்களை வேள்வி குண்ட நிகழ்வுக்கு அழைப்பதில்லை.
 
இரண்டுவாரத்தில் முடிவெடுக்க உத்தரவு
 
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த குடமுழக்கு மற்றும் வேள்வி பூஜைகளை தமிழில் நடத்தவும், இந்நிகழ்வுகளில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டனர்.

Continues below advertisement