உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. மிதுன லக்கனத்தில் கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலையால் கொடி  ஏற்றப்பட்டது.
  



 

மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் சிவாச்சாரியார்கள், வேத விற்பனர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் கொடி கம்பத்தின் முன்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமியும் அம்மனும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நிகழ்ச்சி 15 ஆம் தேதி வரை நடைபெறும்.



 

கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற விழாவானது இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற உள்ளது மதுரை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 12ஆம் தேதி பட்டாபிஷேகமும், 14ஆம் மினாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழச்சிகளும் நடைபெற உள்ளது.  சித்திரை திருவிழாவினை முன்னிட்டு கோவில் முழுவதிலும் பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளன. கொடியேற்றி நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் கரு.முத்துகண்ணன், கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, மாநகர் காவல்ஆணையர் செந்தில்குமார்  உள்ளிட்ட ஏராளமானோர், பக்தர்கள் கலந்து கொண்டனர். 



 

சித்திரை திருவிழாவினை முன்னிட்டு வெப்பத்தில் இருந்து பக்தர்களை காத்து கொள்ளும் வகையில் கோவில் வீதியை சுற்றிலும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.