மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 


மதுரையில் உள்ள மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 


சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 9வது நாளின் இரவு திக் விஜயம் நடந்தது. 10 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மங்கல வாத்தியங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமணமான பெண்கள் புதிய மாங்கல்ய கயிறு அணிந்து கொண்டனர். தொடர்ந்து இரவில் யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், ஆனந்த ராயர் பூப்பலக்கில் மீனாட்சியம்மனும் எழுந்தருளினர். 






இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று காலை 6.30 மணியளவில் வெகு விமரிசையாக தொடங்கியது. திருத்தேரோட்ட நிகழ்வை காண மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மதுரையில் வருகை தந்துள்ளனர். முன்னதாக கீழ மாசி வீதிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து “ஹரஹர மகாதேவா.. நமச்சிவாயம் வாழ்க” என்ற கோஷம் விண்ணதிர பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.