தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு மதுரையில் உடல்நல குறைவால் காலமானார். 87 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக 4 நாட்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானார். இவருக்கு வடிவேலுவுடன் சேர்த்து 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மொத்தம் 7 பிள்ளைகள்.
இவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்ட நிலையில், மாலை உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி. மூர்த்தி நேரில் வந்து மலர் மாலை வைத்து மரியாதை செய்து வடிவேலுக்கு ஆறுதலை கூறினார். பின் செய்தியாளர்களிடம் பேசும் போது
"முதலமைச்சர் ஸ்டாலினும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போனில் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் நேரில் வந்து மரியாதை செலுத்தி உள்ளேம்" எனத் தெரிவித்தார். இதற்கு முன்பாக மு.க அழகிரி முதல் ஆளாக வந்து வடிவேலு தோள் மீது கை போட்டவாறே அழைத்து சென்று ஆறுதல், அதேபோல் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து தனது ஆறுதலைக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்