மதுரை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் அருகே பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர். துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி - டிஐஜி அலுவலகம், காமராசர் பல்கலைகழக கல்லூரி முன்பாக கழிவுநீர் தேங்கும் அவலம்.
மதுரையில் பெய்த மழை
மதுரை மாநகர் தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அரை மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் அருகேயுள்ள, மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையிலிருந்து அழகர்கோவில் சாலையை இணைக்கும் சாலையில் பாதாள சாக்கடை குழாயிலிருந்து வெளியேறும் கழிவு நீரோடு மழை நீரும் சேர்ந்து சாலையில் கணுக்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லக்கூடிய அரசு ஊழியர்கள், நீதிமன்ற, காவல்துறை, விளையாட்டுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயன்படுத்தக்கூடிய சாலையில் கழிவுநீரோடு மழை நீரும் சேர்ந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
இதன் காரணமாக சாலையில் வாகனங்களில் செல்வோர் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கழிவுநீரானது மதுரை சரக காவல்துறை டிஐஜி அலுவலகத்தின் முன்பாகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி வாசல் முன்பாகவும், வனத்துறை அலுவலகம் ஆகிய முக்கிய இடங்களின் முன்பாகவும் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தொடங்கி காவல்துறையினர் , கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்
முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த கூடிய சாலையில், பல மாதங்களாக கழிவுநீர் மழை நீரோடு சேர்ந்து அவ்வப்போது தேங்குவதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் நிலை உருவாகிவருகிறது. அங்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் சில நாட்களிலயே கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி ஒவ்வொரு சிறிய மழைக்கும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் பிரதான சாலையிலே இது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது மதுரை மாநகராட்சியின் அவல நிலையை வெளிப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.