மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை பணியானது விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு ரூ.500 கோடிக்கு நிதி ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டம் பணிகள் 28 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகராட்சி 2-வது வார்டு அசோக்நகர் 2ஆவது தெரு பகுதியில் பாதாளசாக்கடை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.



 

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் 5 ஊழியர்களுடன் நடைபெற்று வந்த பணியின் போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்த  சக்திவேல் என்ற தொழிலாளி 16 அடி ஆழத்தில் உள்ள குழிக்குள் இறங்கி வேலை பார்த்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது . அப்போது அவருடன் இருந்த மற்றொரு தொழிலாளரும் சிக்கிய நிலையில் இடுப்பளவு மண்ணில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து சக தொழிலாளி தானாக மண்ணை தோண்டி வெளியில் வந்த நிலையில் சக்திவேல் தனது இடுப்பில் இருந்த மண்ணை அகற்ற முயன்றுள்ளார். மேலும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்க முயன்றுள்ளனர். ஆனால் பாதாளசாக்கடை பள்ளத்தின் அருகிலேயே இருந்த பெரிய அளவிலான குடிநீர் இணைப்பு குழாயும் உடைந்து தண்ணீர் பள்ளத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து சிறிதுநேரத்திலயே தொழிலாளியின் உடல் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியதோடு மண் சரிவில் புதைந்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றிய பின் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் பொக்லென் இயந்திரத்தின் மூலமாக உடலில் கயிறு கட்டி மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலானது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்த சக்திவேலுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் என இரண்டு குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.



 

இந்நிலையில் தொழிலாளர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  சக்திவேலின் சகோதரர் மணிகண்டன் கூடல்புதூர் காவல்நிலையத்தில் அளித்தார். இந்த புகாரின் கீழ் பாதாள சாக்கடை இணைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்த நிறுவனமான A.K கன்ஸ்டரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் அசோகன் , மேலாளர் சுபாஷ்சந்திரபோஸ்,  சூப்பர்வைசர் ரவிக்குமார் ஆகிய 3 பேர் மீது  தொழிலாளர்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி அஜாக்கிரதையாக பணியில் ஈடுபடுத்தியதாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 


 

 

இந்த சம்பவம் குறித்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், “சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். தொழிலாளருக்கான உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.



 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண