கண்ணீர் மாதிரி தண்ணீர் வருது குழாயே இல்ல; நாள்தோறும் சண்டைதான் வருது-  புலம்பி தவிக்கும் பெண்கள்.

 

ஜல்ஜீவன்

 

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசின் முன்முயற்சி ஜல் ஜீவன் திட்டம் ஆகும். மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குழாய் நீர் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதி குடும்பங்களுக்கு குழாய் நீர் கிடைக்கவில்லை என்று கூறினார். ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.3.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது . வரும் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசு இதை நோக்கி செயல்படும் என்று தெரிவித்தார். மேலும்  ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பழுப்புநிற நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி முறையில் நீரை பயன்படுத்துவது போன்றவற்றையும் இந்த திட்டம் செயல்படுத்தும் என்றார். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் ஜல்ஜீவன் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் இந்த திட்டம் செயல்பட்டும் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

 

தண்ணீர் தட்டுப்பாடு

 

மதுரை மாவட்டம் குலமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வார்டு பகுதிகள் உள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு குழாய் என 500க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாக தனித்தனியாக பதிவெண்களுடன் கூடிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழாய்களை திறந்து பார்த்தால் காற்று மட்டுமே வருகிறது. ஜல்ஜீவன் திட்ட குழாய்களில் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஊராட்சிக்கு உட்பட்ட ஒளவையார் தெரு பகுதியில் குழாய்களில் தண்ணீர் வராமல் கண்ணீர் போல சொட்டுச் சொட்டாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனை பார்ப்பதற்கோ ஏதோ வடமாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதி்போல காட்சியளிக்கின்றது. இதனால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும் ஒவ்வொரு வீடுகளின் முன்பாக உள்ள குடிநீருக்கு பதிலாக மெயின் குழாய்களில் உள்ள ஓட்டைகளில் வடியும் குடிநீரை பிடித்துவருகின்றனர்.  சொட்டுச் சொட்டாக வரும் தண்ணீரை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாப்பாட்டு தட்டுகள், வாட்டர் கேன்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் மூலமாகவும் பிடித்து குடங்களை நிரப்பி வருகின்றனர். இந்த நிலை கடந்த ஒரு வருடமாக நீடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

 

குழாயடி சண்டை

 

தண்ணீரை பிடிக்கும்போது ஒருவருக்கு கூடுதலாகவும் ஒருவருக்கு குறைவாகவும் வருவதால் மற்ற பகுதிகளுக்கு சென்று தண்ணீரை பிடிக்கும்போது பெண்களுக்குள் ஒருவருக்கொருவர் குழாய் சண்டை மோதல் வாக்குவாதம் ஏற்படும் நிலை தொடர்ந்துவருகிறது. இதனால் எப்போதும் தண்ணீர்வரும் அந்த பகுதியில் கூச்சல் குழப்பமாக இருக்கும் நிலை நீடித்து வருவதால் பெண்கள் அச்சத்திற்கு ஆழ்ந்துள்ளனர். மேலும் ஔவையார் தெரு பகுதி முழுவதும் கழிவுநீர் வடிகால் அருகிலேயே குடிநீர் குழாய்கள் இருக்கக்கூடிய நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் துர்நாற்றத்தில் அமர்ந்தபடி, கழிவுநீர் வாய்க்காலுக்குள் பாத்திரத்தைவைத்து குடிநீரை தட்டுகளிலும் பிடித்து அதனை குடங்களில் நிரப்பும் அவலம் தொடர்கிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் அரசுக்கும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நாள்தோறும் குடிநீர் குழாய்களில் தட்டுகள் மூலமாக குடிநீரை பிடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக மாறி விடுவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு இடையே சண்டைக்கு வித்திடுவதாகவும்  தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வீடுகளில் முன்பாக ஜல்ஜீவன் திட்டத்திற்கான இணைப்பு எண் சிமெண்ட் கம்பம் அமைக்கப்பட்டு வெறும் குழாய்கள் காற்று மட்டும் வரக்கூடிய நிலையில் காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் ஆறுகளில் ஊற்றுகளில் தண்ணீர் அள்ளுவது போல தண்ணீரை பிடிக்கின்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக குழாய்களில் உள்ள இணைப்பு பகுதிகளில் உள்ள ஓட்டைகளில் குடிநீரை பிடித்து அதில் தண்ணீர் வீணாகாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதி மக்களே பால் பாக்கெட், கம்புகள் பிளாஸ்டிக் பைகளை வைத்து அடைக்கும் நிலை தொடர்வது வேதனை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.