மதுரை ஐயர் பங்களா கண்காட்சி உடனடியாக நிறுத்த மதுரை அமர்வு உத்தரவு. நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர் கண்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும். -மதுரை அமர்வு உத்தரவு.

மதுரை குணா குகை கண்காட்சி
 
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சபீனா பானு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், " மதுரை ஐயர்பங்களா பகுதியில் "குணா குகை கண்காட்சி" செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அங்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை. ஆகவே மதுரை ஐயர்பங்களா பகுதியில் குணா குகை கண்காட்சியை நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி போன்றவற்றை செய்து தருவதை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
 
கண்காட்சி உடனடியாக நிறுத்த வேண்டும்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. தீயணைப்புத் துறை தரப்பில், " 15 நிபந்தனைகளோடு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதில் 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "இத்தகைய சூழலில் கண்காட்சியை தொடர்ந்து நடத்த அனுமதித்தால், அது பாதுகாப்பானதாக அமையாது. ஆகவே கண்காட்சி உடனடியாக நிறுத்த வேண்டும். நிபந்தனைகளை முழுவதுமாக நிறைவேற்றிய பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே கண்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.