தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பெய்த கனமழை காரணமாக மழை நீரானது வைகை ஆற்றிற்குள் வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் தற்பொழுது மழை நீர் வரத்தொடங்கியதால் நீர் வரத்தின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது .
மதுரை வைகை ஆற்றின் ஆரப்பாளையம் மேம்பாலத்தின் கீழ் மேய்ந்துகொண்டிருந்த 5 குதிரைகள் திடீரென வெள்ளத்தில் சிக்கிகொண்டது. இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து தீயணைப்புத்துறையினர் வெள்ளத்திற்குள் இறங்கி குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்துவருவதால் குதிரையை வெள்ள நீர் சூழ்ந்துவருவதால் அதனை மீட்க தீயணைப்புத்துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் குதிரைகள் மீட்கப்பட்டது.
ஒரே ஆண்டில் வைகை அணையின் நீர்மட்டம் பலமுறை 70 அடியை எட்டி உள்ளது. அதேபோல அணையின் முழு உயரமான 71 அடியை இதுவரையிலும் ஆறு முறை எட்டி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக அணைக்கு வினாடிக்கு 10538 கன அடி நீர் வந்ததும், அது உபரிநீராக வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் மீண்டும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறையினர் அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.