தஞ்சாவூர் மாவட்டம், ஜமீல் நகர் பகுதியில் மதுபான கடை அமைக்க தடை கோரிய வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் அந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அறிவிப்பு வெளியிட்டால் மனுதாரர் புதிய வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இராஜராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் மாவட்டம் சத்தியகிருஷ்ண நகர் பகுதியில் இசை பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். அதன் அருகில் ஜமீல் நகர் பகுதியில் கடந்த 3 மாதமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் மதுபானக்கடை அமையுள்ளதாக தெரிவித்தனர். மதுபானக்கடை அமைய உள்ள பகுதிக்கு 100 மீ அருகில் பெண்கள் கல்லூரி மற்றும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது மேலும் பல்வேறு கல்லூரிகள் சுற்றுவட்டாரத்தில் இயங்கிவருகிறது.  


கல்வி நிறுவனம் இருக்கும் பகுதியில் 100 மீட்டருக்குள் மதுபானக்கடை அமைக்க கூடாது என சட்டம் உள்ளது. பெண்கள் கல்லூரி அருகே மதுபானக்கடையை அமைக்க தடை விதிக்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுபான கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் மதுபானக்கடையும் அமைக்க அறிவிப்பு தற்போது வரை இல்லை என தெரிவிக்கப்பட்டது. 


இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பு பதிலையேற்று வழக்கை முடித்து வைத்தனர் மேலும் வரும் காலத்தில் அந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அறிவிப்பு வெளியிட்டால் மனுதாரர் புதிய வழக்கு தொடரலாம் என தெரிவித்தனர்.


 




மற்றொரு வழக்கு


லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - நீதிபதி


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் முறைகேடாக சான்றிதழ் வழங்கிய வழக்கில் முன்னாள் தொலைதூர கல்வி தேர்வு துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட 4  நபர்கள் முன் ஜாமீன் கோரிய வழக்கில், நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  முன்னாள் தொலைதூர கல்வி தேர்வு துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் தொலைதூரக் கல்வி மையம் உரிமையாளர்கள் சுரேஷ், ஜிஜி, ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தில் முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்து மதிப்பெண் பட்டியல், பாடநெறி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கி அரசிற்கு  இழப்பீடு ஏற்படுத்தியதாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இதில், தங்களுக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் தொலைதூரக் கல்வி மையம் உரிமையாளர்கள் ஜிஜி, சுரேஷ் மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நபர்கள் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது


அப்போது நீதிபதி லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்து முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.