மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யக் கோரிய மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவ்வாறிருக்கையில் அவர் தற்போதைய அறிக்கையைக் கோர இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


மதுரை, யாகப்பா நகரைச் சேர்ந்த இருளாண்டி, மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுத்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், கழிவை அகற்றும் பணியின்போது ஏற்படும் மனித மரணங்கள் தொடர்ந்துகொண்டே போகிறது. இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவை அரசே மதிக்காத நிலை உள்ளது. இழப்பீடு வழங்கும் உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.


தூய்மை இந்தியா திட்டத்திற்காக 2018-19ம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக உள்ளாட்சிகளில் 35 ஆயிரம் பேர் தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர். எனவே, தமிழக தூய்மை பணியாளர்கள் நலன் கருதி, மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத் தடுப்பது தொடர்பான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவ்வாறிருக்கையில் அவர் தற்போதைய அறிக்கையைக் கோர இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


 




கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களுக்கு என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்? அரசியலமைப்பு வழிபாட்டு உரிமையை மதித்து நடப்பதால் பல சமயங்கள் நடைமுறையில் உள்ளன.- மதுரைக்கிளை நீதிமன்றம்


 உலகம்  பலவற்றையும் நோக்கி வளர்ச்சியடைந்துவரும் அதே சமயம், கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்று இருக்கும் சூழலும் நிலவுகிறது- நீதிபதிகள்


ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள இரு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு : வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில், விநாயகர் கோவில் என 2 கோயில்கள் உள்ளன. 


கடந்த 2009ஆம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது, 2(தேவர், கவுண்டர்) சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. விநாயகர் கோவிலின் திருவிழாவை ஒரு சமூகத்தினரும், மந்தையம்மன் திருவிழாவை மற்றும் சமூகத்தினரும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அவை தவிர பிற நாட்களில் இரண்டு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. 


இந்நிலையில் விநாயகர் கோவிலை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களது கோவில் என உரிமை கொண்டாடுவதோடு,  அவர்களது சமூக தலைவரின் சிலையையும் கோவிலில் வைத்துள்ளனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல், கோவிலை பூட்டி வைக்கும் சூழலும் உள்ளது. ஆகவே ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள இரு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தங்களுக்கு என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்? அரசியலமைப்பு வழிபாட்டு உரிமையை மதித்து நடப்பதால் பல சமயங்கள் நடைமுறையில் உள்ளன. உலகம்  பலவற்றையும் நோக்கி வளர்ச்சியடைந்து வரும் அதே சமயம், கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்று இருக்கும் சூழலும் நிலவுகிறது என கருத்து தெரிவித்து, வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.