மதுரை அவனியாபுரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுப்பிரமணயத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.  இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், சுப்பிரமணியம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம்  தீர்ப்பளித்தார்.


மற்றொரு வழக்கு

 


மதுரை லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள் டூவீலருடன் அத்துமீறி நுழைந்து கல்லூரி வாட்ச்மேனை எட்டி உதைத்து தாக்கி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த வழக்கில்  சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், முத்துவிக்னேஷ், விமல்ஜாய் பேட்ரிக் ஆகிய 7 பேர் ஜாமீன் கோரிய மனுவை மதுரைமாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

மதுரையிலுள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள் டூவீலருடன் அத்துமீறி நுழைந்த கும்பல் கல்லூரி வாட்ச்மேனை எட்டி உதைத்து தாக்கினர். மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடமும் தகாதவாறு நடந்து கொண்டதுடன், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தினர்.

 

தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்து சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், மணிகண்டன், முத்துவிக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், விமல்ஜாய் பேட்ரிக், அருண் மற்றும் மைனர் சிறுவன் ஒருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், முத்துவிக்னேஷ், விமல்ஜாய் பேட்ரிக் ஆகியோர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வடமலை விசாரித்தார்.

 

அரசு தரப்பில, மது போதையில் வந்தவர்கள் வாட்ச்மேனை தாக்கி, டூவீலரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பர். சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 7 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.