போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.






மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வெவ்வேறு மனுக்களில் கூறியிருப்பதாவது:

 

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த 20 பேரில் 18 பேருக்கு மதுரை தெற்கு தாலுகா நிலையூர் பகுதியில் கடந்த 2012ல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் வீடு கட்டி குடியிருக்க ஏதுவானதாக இல்லை. பாறைகளும், பள்ளங்களுமாய் உள்ளது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, அதே இடத்தில் போலியாக பட்டா கொடுத்துள்ளனர். 

 

எனவே, போலியாக பட்டா வழங்கிய விவகாரத்தில் அப்போதைய  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கையும் எடுக்க வேண்டுனெ கூறியிருந்தார்.

 

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லா விட்டால் அவர் ஆஜராகுமாறு உத்தரவிடப்படும் என  உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.



மற்றொரு வழக்கு






 

ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர் எஸ் மங்கலம் கண்மாய்க்கு நீர் வரும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு

 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ," "வறட்சியான மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய் மற்றும் ஆர்எஸ் மங்கலம் கண்மாய் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டவை. இந்த கண்மாய்களே ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளுக்கான நீரை வழங்கி, குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.  தற்போது பருவமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. காரணம் பெரிய கண்மாய் மற்றும் ஆர்எஸ் மங்கலம் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்கள், துணை கால்வாய்கள் மற்றும் ஊருணிகள் முறையாக பராமரிக்கப்படாததே.  பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல கால்வாய்கள் முட்செடிகளால் நிறைந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் ஆர் எஸ் மங்கலம் கண்மாய்க்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள், ஊரணிகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவற்றை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் " என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, வழக்கு தொடர்பாக, பொதுப்பணி துறையின் மதுரை மாவட்ட தலைமை பொறியாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.