சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான தணிக்கை விவரங்களில் டெண்டர் வழங்கியது உள்ளிட்ட முறைகேடான நடவடிக்கைகளால் கோவிலுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான தணிக்கை விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றேன். அதில் டெண்டர் வழங்கியது உள்ளிட்ட முறைகேடான நடவடிக்கைகளால் கோவிலுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் மீது அளிக்கப்படும் புகார்களை விசாரிக்க பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி மனுதாரர் மனு போதிய அடிப்படை ஆதாரம் இன்றி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல ஏற்கனவே மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடியானது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
100% வாக்குப்பதிவிற்கு துணை புரியும் வகையில், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது மதுரைக்கிளை
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தேனி மாவட்ட செயலராக இருக்கிறேன். "எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது" என்பதே தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரமாக உள்ளது. 100% சதவிகித வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அன்று தேர்தல் பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலமாக செலுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது. தபால் வாக்கை பெறுவதற்கு விண்ணப்பம் 12ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் தபால் வாக்கை, அதற்கான விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து, உரிய அலுவலரின் ஒப்புதலுடன் அனுப்பவேண்டும்.
இதற்கான பயிற்சியும் வழங்கப்படும் சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்விதமான விண்ணப்பங்களும் தொலைந்து விடாமல் அனுப்புவது மிக கடினமான ஒரு நடைமுறையாக உள்ளது. பல நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கின்றன. அதனால்தான் தபால் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 2011-ம் ஆண்டு தேர்தலில் தபால் வாக்குகள் 12ஆம் எண் 2 லட்சத்து 69 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 628 விண்ணப்பங்கள் மட்டுமே மீண்டும் பெறப்பட்டன. அவற்றில் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 94 வாக்குகள் மட்டுமே. அந்தவகையில் தபால் ஓட்டுகளே அதிக அளவில் செல்லாதவையாக வீணாகின்றன. இதனால் 100% வாக்குப்பதிவு நடைமுறையில் தொய்வு ஏற்படுகிறது. ஆகவே 100% வாக்குப்பதிவிற்கு துணை புரியும் வகையில், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, " இந்த விவாகரம் தொடர்பாக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்