தல்லாகுளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்த  வீரதங்காள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "என் சகோதரர் ஜீவா அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோசடி செய்ததாக பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கும் எனது சகோதரருக்கும் ஏற்கனவே சொத்து பிரச்சனை கீழமை நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இதில் என்னை பழி வாங்கும் நோக்கில் தற்போது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் காவல் நிலைய ஆய்வாளர் என்னை அழைத்து விசாரணை செய்தார் . விசாரணையில் எனது தரப்பு நியாயங்களை, ஆவணங்களையும் தாக்கல் செய்தேன். ஆனால் அது எதையுமே காவல் ஆய்வாளர் ஏற்றுக் கொள்ளாமல், இந்த வழக்கு இயந்திரத்தனமாக பதியப்பட்டுள்ளது. முன்விரோத காரணங்களால் பதியப்படும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. எனவே என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில், "தலைமை காவலர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முதல் கட்டத்தில் இருக்கிறது. மேலும் இவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி சுவாமிநாதன் தலைமை காவலர் மீது தற்போது தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முதல் கட்டத்தில் உள்ளது. இன்னமும்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல எனக்கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.