மதுரையில் எஸ்.எஸ் காலணி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம் குறித்து காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்க கோரி வழக்கில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கோச்சடையைச் சேர்ந்த எம்.ஜெயா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என் மகன் முத்து கார்த்திக் இவரை மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ், சார்பு ஆய்வாளர் சதீஷ், காவலர்கள் ரதி மற்றும் காவலர்கள் ஒரு திருட்டு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

 

காவல் நிலையத்தில் 3 நாள்  சட்டவிராதமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்து பின்னர் பொய் வழக்கில் கைது செய்தனர் .மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட முத்து கார்த்திக் பின்னர் இறந்தார். என் மகன் மரணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிபிசிஐடி போலீஸார் விசாரித்து காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உட்பட 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும் அந்த 3 பேர் மீது இதுவரை துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, என் மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட 3 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என  கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதி, மனுதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.








 

மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் - மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து 

 

மதுரை மாவட்டம், பி.பி.குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புதுமண்டபத்திலுள்ள கடைகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.  2006ஆம் ஆண்டு 20 கடைகளுடன் செயல்பட்டு வந்த குன்னத்தூர் சத்திர கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக 200 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது புதுமண்டபத்தில் செயல்பட்டு வரும் 300 கடைகள், ஏற்கனவே குன்னத்தூர் சத்திரத்தில் செயல்பட்ட 20 கடைகள் என சேர்த்து, புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் பின்பற்றப்பட்டு கட்டப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் 200 கடைகள் மட்டும் கட்டப்பட்டுள்ள நிலையில், அதில் 300 கடைகள் அமைந்தால் விசேஷ நேரங்களில் அதிகமான மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் கட்டிடத்திற்கு செல்ல ஒரு வழிபாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவசர வழிகள் அமைக்கப்படவில்லை. மேலும் முறையான வாகனம் நிறுத்துமிட  வசதிகள் செய்யப்படவில்லை. 300 கடைகள் செயல்பட உள்ள கட்டிடத்தில் 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கான இடம் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கான முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

 

எனவே,புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், அதுவரை குன்னத்தூர் சத்திர கட்டிடத்தை திறக்க தடை விதித்தும்  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கடைகளில் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். எந்த வழிமுறைகளை மேற்கொண்டு கட்டிடத்தின் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதை ஆய்வு செய்து, மதுரை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.