சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடியை இடிப்பதற்கு தடை கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கரங்கோவிலை சேர்ந்த சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சங்கரன்கோவில் அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே 50 சென்ட் பரப்பளவில் காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி அமைந்துள்ளது. இங்கு 63 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 39 கடைகள் கதவுடனும் 24 கடைகள் திறந்தவெளி கடைகளாகவும் உள்ளது. தினசரி வருமானத்தை கொண்டு இங்குள்ள வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இந்தக் கடைகளுக்கு தினசரி வாடகை அடிப்படையில் வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கடைகளின் வாடகையை ஒப்பந்ததாரர் பெற்று வருகின்றார். ஒப்பந்ததாரருக்கு 2023 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இடைக்கால தடை உத்தரவு!

 



 

இந்த நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்து விரிவாக்கம் செய்து புதுப்பிப்பதற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடிகளை இடிப்பதற்கான நோட்டீஸ் 2022 மே 27 ஆம் தேதி மற்றும் 2022 ஜூன் 7ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி இடிப்பது தொடர்பான கூட்டத்தில் தினசரி வியாபாரிகள் கலந்து கொண்டோம். ஆனால் எங்களது கருத்துக்களை கேட்கவில்லை. ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் பெரியார் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே அண்ணா பேருந்து நிலையத்தை புதுப்பித்து உள்ளூர் பேருந்துகள் இயக்கவும், பெரியார் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இயக்கவும் காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி இடிக்க கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

 

எனவே, சங்கரன்கோவில் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகளை இயக்கி அண்ணா பேருந்து நிலையத்தை புதுப்பித்து உள்ளூர் பேருந்துகளை இயக்கவும், காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி உள்ள கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

 

 















தவறான மனுவை தாக்கல் செய்ததால் 50 ருபாய் அபராதம் விதித்த மதுரை உயர்நீதிமன்றம்

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன், மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பத்தூர் நகரில் உள்ள நிலம் மானிய நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை வர்த்தக சங்கத்தின் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்ததில் அந்த பட்டா போலியானது என தெரியவந்தது. அந்த நிலத்தை மோசடியாக பயன்படுத்தும் வகையில் சிலர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போலி ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். சொத்தின் உரிமையாளர்களை மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டு உள்ளனர். பலரை மிரட்டி கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். எனவே நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, இந்த மனு எந்தவித சம்பந்தமும் இல்லாத வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தாக்கல் செய்துள்ள இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் மனுதாரருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர், மதுரை காந்தி மியூசியத்திற்கு செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண