மதுரை மாவட்டம் காரியேந்தல்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மேலூர் காரியேந்தல்பட்டியில் உள்ள கருப்பசாமி கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது வழக்கம். காரியேந்தல்பட்டி மஞ்சுவிரட்டு மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கான அரசிதழில் சேர்க்கப்படாமல் உள்ளது. எனவே, காரியேந்தல்பட்டி மஞ்சுவிரட்டை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு அரசிதழில் சேர்க்கக்கோரி அதிகாரிகளிடம் ஊர் மக்கள் சார்பாக பல்வேறு மனுக்கள் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 09 ஆம் தேதியன்று கருப்பசாமி கோவில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதாக ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே, மதுரை, மேலூர் பகுதியிலுள்ள காரியேந்தல்பட்டி மஞ்சுவிரட்டை, மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு அரசிதழில் சேர்க்கவும், ஏப்ரல் 9ஆம் தேதி மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரர் தரப்பில் மேலூர்,  காரியேந்தல்பட்டியில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியை அரசிதழில் சேர்ப்பதற்காக அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், காரியேந்தல்பட்டி மஞ்சுவிரட்டு போட்டியை அரசிதழில் வெளியிடுவது தொடர்பான மனு குறித்து முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

 




 

திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 350 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2018ல் ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. பள்ளியைச் சுற்றி ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.  இரவு நேர காவலர்கள் இல்லாததால் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்துள்ளது. ஆய்வக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

 

எனவே, பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து, இரவு காவலரை நியமிக்கவும், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் பொருத்தவும், குடிநீர் மிஷின் பொருத்தவும், கூடுதல் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.