திண்டுக்கல்லில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனியாா் கல்லூரி தாளாளா் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கண்டித்தும், ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஜனநாயக மாதா் சங்கத்தினா், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் கடந்த 6ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வழக்குரைஞா் தேவேந்திரன் என்பவருக்கும், மாதா் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, தன்னை தாக்க முயன்றதாக தேவேந்திரன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.பாலபாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது மற்றும் அடையாளம் தெரியாத 20 போ் உள்பட மொத்தம் 27 போ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

 



 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் ஜானகி உள்ளிட்ட 6 பேர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில், "சம்பவம் நிகழ்ந்த அன்று வழக்கறிஞர் தேவேந்திரனே மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். அதனைக் கண்டிக்கும் வகையில் மாதர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் வழக்கறிஞர் அவரை தாக்க வந்ததாக பொய்யான புகார்  அளித்துள்ளார். அதனடிப்படையில் இந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் நீதிமன்றத்தின் முன்பாகவோ, நீதிமன்ற வளாகத்திலோ இதுபோல் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என பாலபாரதி மற்றும் முன் ஜாமின் கோரியோர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை 6 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்



 

கோவில் நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் - இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 

மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," இந்தியாவில் பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனக்கே உரிய சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு என 4.22 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும், பல கோடி மதிப்பிலான தங்கம் வைர நகைகளும் உள்ளன. இந்த கோவில்களில் இருக்கக்கூடிய குளங்களை முறையாக பராமரிக்கவும், அவற்றை புதுப்பித்து மழைநீரை சேமிக்கும் வகையில் மறுகட்டமைப்பு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் கோவில் குளத்தில் சேராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் குளங்களிலும் குப்பை மற்றும் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும், மீறுவோர் மீது அதிக அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், கோவில் குளங்களை முறையாக தூர்வாரி பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

 

அரசுத்தரப்பில்," இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1586 திருக்கோவில்களில் 2359 திருக்குளங்கள் உள்ளன. இவற்றில் 1291 குளங்கள் நல்ல நிலையில் உள்ளன.1068 குளங்களில் நீர் நிரம்பிய போதிலும் படிக்கட்டுகள், மதிற்சுவர் போன்றவை புனரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இவற்றில் 911 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுவிட்டது.   37 திருக்குளங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோவில் குளங்களை சுத்தப்படுத்தி, பராமரிப்பது, தூர்வாருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த  வழிகாட்டல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை நடைமுறைப்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக, நிலை அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.