மதுரை மாநகராட்சி 4வது வார்டு காமராஜ் நகரில் குடிநீர் குழாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்கவும், துண்டிக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்காலை சரி செய்ய கோரிய வழக்கில், மனுதாரர் கோரிக்கை குறித்து அதிகாரிகள் 6 வாரத்திற்குள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை வள்ளுவர் காலனியைச் சேர்ந்த முத்துமணி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. 

அதில், "மதுரை மாநகராட்சி 4வது வார்டு காமராஜ் நகரில் கடந்தாண்டு பாதாள சாக்கடை குழாய் பதித்தல், குடிநீர் குழாய் அமைத்தல் பணிகள் நடந்தது. குண்டும், குழியுமான சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  எனவே, திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்கவும், துண்டிக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்காலை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து அதிகாரிகள் 6 வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.



 







மாநகராட்சிகளில் லஞ்ச ஊழலை தவிர்க்க சிறப்பு பிரிவு அமைப்பது உட்பட 10 நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்த கோரிய வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மதுரை, மஹால் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடர்பான ஒரு வழக்கில், லஞ்ச ஊழலை தவிர்க்க சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். சிசிடிவி காமிராக்கள் பொருத்த வேண்டும். மாநகராட்சி கமிஷனர் நேரடி கண்காணிப்பில் கண்காணிப்பு கூட்டங்கள் நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.  இந்த வழிகாட்டுதல்கள் இதுவரை அமலாகவில்லை. சிறு வேலைக்கு கூட பணம் செலவிடும் நிலை உள்ளது.  எனவே, நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

 

மாநகராட்சி தரப்பில், 10 வழிகாட்டுதல்கள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவில் 6 வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இதன்படி, 1) மாநகராட்சியில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2) விஜிலென்ஸ் பிரிவு செயல்படுகிறது. 3) கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மதுரை மாநகராட்சி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.