இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் தொடர்ந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கழனிவாசலில் வி.ஏ.ஓ.,வாக நான் பணிபுரிந்து வந்தேன். அங்கு பல்வேறு நில ஆக்கிரமிப்புகள் குறித்தும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஈடுபடுபவர்கள் குறித்து உரிய  நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்ததால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு மனு அளித்தேன். இதனால் என் உயர் அதிகாரிகளால் நான் தூதை என்ற கிராமத்தில்

பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். பணி மாற்றத்தை  ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து பணியிட மாறுதலுக்கு தடை உத்தரவு பெற்றேன். இதனால் எனது உயர் அதிகாரிகள் என் மீது பல விதத்தில் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வந்தனர்.



 

குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி சேலைகளை மக்களுக்கு வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும் அதனை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்ததாக என் மீது பொய்யான வழக்கு கடந்த 2017ஆண்டு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டது இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி சதி குமார் சுகுமார குருப் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் நேர்மையான பணியாளர் என்பதால் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்பட்டுள்ளார். மேலும் அரசு வழங்கும் இலவச வேட்டி சேலைகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பாக மாட்டார். இந்த வழக்கு முற்றிலும் பொய்யாக தொடரப்பட்ட வழக்கு என்பதால் இவர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து காரைக்குடி கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற உள்ளதால் இந்த வழக்கு ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.



 

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழங்கி உள்ள தீர்ப்பில், மனு தாரரான கிராம நிர்வாக அலுவலர் இலவச வேட்டி சேலைகளை திருடி பதுக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதம் கவனிக்கத்தக்கது. மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது. இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு  சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்  ஆவர். எனவே அரசின் இலவச வேட்டி, சேலைகளை மோசடி செய்ததாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.