மத்திய அரசால் ரூ.500,1000 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது திருப்பி செலுத்த இயலாத நிலையில் தன்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு.

 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 

 

மதுரை சேர்ந்த அஜய் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான் பருத்தி பஞ்சு மற்றும் நூலை  நூற்பாலைகளில் இருந்து பெற்று வேறு தொழிலகங்களுக்கு அதனை விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுதோறும் முறையாக வருமான வரியை செலுத்துகிறேன். கடந்த 2016 -ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய  அரசு செய்தது. 2016 டிசம்பர் 30-ம் தேதிக்குள்ளாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. டிசம்பர் 30-ம் தேதி திருப்பூர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஒரு கோடியே 17 லட்ச ரூபாயை மாற்ற சென்றேன். அங்கு ஏற்கனவே நிறைய நபர்கள் வரிசையில் இருந்ததால், நானும் வரிசையில் காத்திருந்தேன். சுமார் 04.30 மணி அளவில் வங்கியின் மேலாளர் சர்வர் பழுதாகிவிட்டதாகவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் குறிப்பிட்டு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு கால அவகாசம் பெற்று தருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. 

 

உச்சநீதிமன்றம் தகவல்

 

தொடர்ச்சியாக பலமுறை ரிசர்வ் வங்கிக்கு இது தொடர்பாக மனு அனுப்பிய நிலையில், எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இதனால் நூல் வாங்கிய நிறுவனத்திற்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் அவர்கள் என் மீது கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள். என் மீது இரண்டு குற்ற வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பான நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே   என்னிடமுள்ள ஒரு கோடியே 17 லட்சத்தை வங்கி ஏற்க மறுத்தால் என்னால் பிற நிறுவனங்களுக்கு தொகையை திருப்பி செலுத்த இயலாது.  ஆகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது திருப்பி செலுத்த இயலாத நிலையில் என்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாயை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

 

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 500, 1000 ரூபாயை மாற்ற முயற்சித்த அனைத்தும் ஆதாரங்கள் கொண்ட  மனுக்களையும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் கோரிக்கை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.