ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கு பரிசு வழங்கும் முன்  அரங்கில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து  பின்பு முதல் இரண்டு மற்றும் மூன்றாவது பரிசுகளை வழங்க உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

ஜல்லிக்கட்டு போட்டி

 

தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.

 

ஜல்லிக்கட்டில் நெகிழ்ச்சி 


மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கு பரிசு வழங்கும் முன்  அரங்கில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து  பின்பு முதல் இரண்டு மற்றும் மூன்றாவது பரிசுகளை வழங்க உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

மதுரையை சேர்ந்த மணிகண்டன்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்..,” மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அமைந்துள்ள கீழக்கரை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில்  சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. எங்களது காளை வாடி வாசலில் இருந்து வெளியே வந்து சிறப்பாக விளையாடியது. அதை பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். 

 

எங்களது காளை முதல் பரிசு வாங்கும் என்று அனைவரும் நம்பிக்கையூட்டிய நிலையில்  வேறு சிலருக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்படுவதாக விழா கமிட்டியினர் மற்றும் அரசு அதிகாரிகள் அறிவித்தனர். எங்களது காளை சிறப்பாக விளையாடி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்ற நிலையில், இதுபோன்று அரசியல் காரணமாக பரிசுகளை தட்டி பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த பின்பு முதல் இரண்டு மற்றும் மூன்றாவது பரிசுகளில் அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.