மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி வழக்கில், நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இருக்கக்கூடாது என்றும், நாகரிகமான உடைகள் அணிய வேண்டும் என்றும் இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

 

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மாரிச்சாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.  இந்த திருவிழாவில் வருகிற 8ம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரகாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

 

* நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இருக்கக்கூடாது. நாகரிகமான உடைகள் அணிய வேண்டும்

இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது

 

* எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது.

 

* ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது

 

* நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ

உட்கொள்ளக் கூடாது

 

* நிகழ்ச்சி இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 



மற்றொரு வழக்கு















மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது, தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டுள்ளது -  தமிழக அரசு

 

வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளை அகற்றி பாதுகாக்கக் கோரியும், ஆங்காங்கே தடுப்பனைகள் கட்டக் கோரியும், மதுரை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றி, பாதுகாத்திடவும் கோரி ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், வைகை ஆற்றில் இதுவரை 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 4 தடுப்பணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. வண்டியூர் கண்மாயில் நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா மையமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவால் வண்டியூர் தெப்பக்குளத்தில் சில ஆண்டுகளாக தண்ணீர் நிரந்தரமாக தேக்கப்பட்டுள்ளது. வைகையில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வண்டியூர் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்படுவதால் சுற்றுப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது, தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தடுப்பணை அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.