கூடுதல் வரதட்சணைக்காக மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த சுதர்சனா என்ற பெண் அயர்லாந்தில் அலைக்கழிக்கப்பட்ட வழக்கில், பெண்ணின் மாமனார் கோவையை சேர்ந்த வெங்கட்ராஜ் அவரது மனைவி பாணு, உறவினர் பாலாஜி ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரைச் சேர்ந்தவர் கவுதம். இவரது குடும்பத்தினர் கோவையில் வசிக்கின்றனர். இந்நிலையில் கவுதமிற்கும், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த சுதர்சனாவிற்கும் இடையே கடந்த 10.12.2021ல் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு 15 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் விசா பெற்றதும் அழைத்து செல்வதாக கூறிய கவுதம் மீண்டும் டப்லின் சென்றுள்ளார். மாமனார் வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் கணவர் விசா அனுப்பியதும் சுதர்சனா, அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு அவரை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. வீட்டுக்கு சென்றபோது வீட்டை யாரும் திறக்கவில்லை. இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுதர்சனா அயர்லாந்து இந்திய தூதரகத்தில் புகார் அளித்து விட்டு நாடு திரும்பினார். புகாரின் பேரில் மதுரை திலகர்திடல் அனைத்து மகளிர் போலீசார் கவுதம், இவரது தந்தை வெங்கட்ராஜ் தாய் பாணு, உறவினர் பாலாஜி, இவரது மனைவி ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் மீது வரதட்சனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் வெங்கட்ராஜ் இவரது மனைவி பாணு, பாலாஜி மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி பி.வடமலை விசாரித்தார்.
அரசு தரப்பில், கூடுதல் வரதட்சனைக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர். பாலியல் ரீதியாக தொந்தரவு நடந்துள்ளது. அயர்லாந்துக்கு அழைத்து சந்திக்காமல் வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர். எனவே, முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முன்ஜாமீன் கோரிய வெங்கட்ராஜ் இவரது மனைவி பாணு, பாலாஜி ஆகிய 3 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஸ்ரீபிரியாவுக்கு மட்டும் முன்ஜாமீன் அனுமதித்து உத்தரவிட்டார்.
மதுரை உத்தங்குடி கப்பலூர் இடையிலான நான்கு வழிச்சாலையில் டோல்கேட் அமைப்பதற்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலையை 4 வழிச்சாலை மாற்றப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு, செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 டோல்கேட் மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. புதிய சுங்கக்கட்டண மையங்களால் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே புதிய சுங்க மையங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல மதுரையை சேர்ந்த வக்கீல் விஜயராஜா மற்றும் மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்த பதில்உத்தங்குடி முதல் கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலையை ரூ.200 கோடி செலவில் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்க செலவான தொகையை சுங்கக்கட்டணம் மூலம் பெற 18 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் தற்போது உள்ள 3 மையங்களில் ஏதாவது ஒன்றில் கட்டணம் செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், இந்த சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல மோட்டார் சைக்கிள்கள் ஆட்டோ செல்வதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர்களுக்கு வேறு ஏதேனும் கோரிக்கை இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.