தங்க நகை கடையில் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யும் பொழுது தங்க நகை வாங்கியவர் பெயர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற எண், தேதி நகையின் விபரம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய கோரிய வழக்கில், மனுதாரரின் மனு குறித்து BIS நிர்வாக இயக்குனர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


தேனி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தேனி மாவட்டத்தில் ஹால்மார்க் மையம் நடத்தி வருகிறேன். தங்க நகைகள் விற்பனை செய்பவர்கள் நகைகளுக்கு ஹால்மார்க் சென்டரில் பரிசோதனைக்கு உட்படுத்தி ஹால்மார்க் அங்கீகாரம் பெற்று செல்வது வழக்கம்.


ஹால்மார்க் சென்டரில் நகைக்கடை வியாபாரிகள் கொண்டு வரும் தங்க நகைகளில் தோராயமாக ஒன்றை தேர்வு செய்து பரிசோதனை செய்து அதற்கான பிரத்தியோக எண் கொடுக்கப்படும். மேலும் இந்த நகைகள் குறித்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆனால், நகை கடை வியாபாரிகள் நகைகளை விற்பனை செய்யும் பொழுது போலியான ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற நகைகளை விற்பனை செய்வதினால் அதிக அளவு ஹால்மார்க் சென்டர்களே பாதிப்பு அடைகின்றனர்.


எனவே, நகைக் கடையில் தங்க நகைகள் விற்பனை செய்யும் பொழுது தங்க நகை வாங்கியவரின் பெயர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற எண், தேதி நகையின் விபரம் ஆகியவற்றை ஹால்மார்க் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் போலி நகைகள் விற்பனை செய்தால் எளிதாகக் கண்டறிய முடியும்.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தங்க நகை கடையில் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யும் பொழுது தங்கம் வாங்கியவர் பெயர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற எண், தேதி நகையின் விபரம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனு குறித்து BIS நிர்வாக இயக்குனர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தார்.