திண்டுக்கல் அண்ணாநகர் பகுதியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து முறையாக அனுமதி பெறாமல் தனி நபர் கட்டிய கட்டிடத்தை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கரூர், தாந்தோணி பகுதியை சேர்ந்த குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "திண்டுக்கல் மாவட்டம், அண்ணா நகர் பகுதியில் சர்வே எண்: 1954/1B ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 40 அடி பொது சாலை அமைந்துள்ளது. இந்த பொது சாலையை ஆக்கிரமித்து ராஜா என்ற தனிநபர் அனுமதி இன்றி கட்டிடம் கட்டி வருகிறார். எனவே, 40 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருவதை நிறுத்தி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ராஜா என்பவர் எந்த வரைபட அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியுள்ளார்.

திண்டுக்கல் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ்க்கும் முறையான பதில் அளிக்கவில்லை. வழக்கறிஞர் ஆணையம் அளித்துள்ள அறிக்கையிலும் முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் நகராட்சி ஆணையர் ஆகியோர் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை 2 வாரத்திற்குள் இடிக்க உத்தரவிட்டனர். மேலும் தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



மற்றொரு வழக்கு


 பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் தனக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி தொடர்ந்த  வழக்கில்,மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


 

மதுரை காளிகாப்பானைச் சேர்ந்த மகா சுசீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பாஜகவின் மதுரை மாவட்ட தலைவராக உள்ளேன். கிராமங்களில் பாரதிய ஜனதாவின் கொள்கைகள் சென்றடையவில்லை. இதனால் களப்பணிகளை முன்னெடுக்கும் போது ஏராளமான எதிர்ப்புகள், பிரச்சனைகள், பிற கட்சியினரின் தொந்தரவுகள் உள்ளன. மதுரை அண்ணா நகர், அலங்காநல்லூர் கேட்டு கடை, அவுட் போஸ்ட் ஆகிய பகுதிகளில் பலமுறை பிறரால் தாக்கப்பட்டு இருக்கிறோம்.

 

இந்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்ததன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் சில காரணங்களை கூறி காவல்துறை பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சூழலில் எனது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் போதிய காவல்துறை பாதுகாப்பு அல்லது தனி பாதுகாப்பு காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர்," மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.