மதுரையில் 25 கிலோ கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்த போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து வெளியில் வந்து கொலை செய்வோம் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கஞ்சா கடத்தல்
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தபோது 25 கிலோ உலர் கஞ்சா இலைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டுள்ளனர். பின்னர் மூவரையும் பிடித்து விசாரித்தபோது மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் அண்ணன் சின்னமுனுசு மகன் சண்முகவேலு இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்குமாறு கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
தண்டனை விதிப்பு
மேலும் அந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், அதன்பிறகு திருச்சியில் கஞ்சா வழக்கில் சண்முகவேல் சிறைக்கு சென்றுவிட்டார் என கூறியுள்ளனர். இதையடுத்து பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி ஹரிஹரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மூவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துசெல்ல தயாரானர்.
கொலை மிரட்டல்
நீதிமன்றத்தின் உத்தரவை கேட்ட குற்றவாளிகளான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் ஆகிய இருவரும் திடீரென நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நிதீமன்றத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகளில் ரத்தம் சொட்டச் சொட்ட கிளாமர் காளி கொலை வழக்கில் எதற்கு சுபாஸ்சந்திரபோசை என்கவுன்ட்டர் செய்தீர்கள் என மிரட்டியதோடு நான் வெள்ளைக்காளி பசங்க தான் என கூறிய பின், நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து நீதிபதியை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது காவல்துறையினர் இறுகப்பிடித்தபோதும் துள்ளிகுதித்து தப்பியோட முயன்றபோது காவல்துறையினர் தடுத்ததால் காவல்துறையினரையும், வழக்கறிஞர்களையும் ஆபாசமாக பேசியதோடு தொடர்ந்து மிரட்டியபடி சென்றனர். அதனை பார்த்த காவல்துறையினரே மிரண்டுபோய் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் இருவரையும் பாதுகாவலுக்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நீதிபதிக்கே கொலை மிரட்டல்
வெள்ளைக்காளியின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திலயே எவ்வித அச்சமுமின்றி நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்ததோடு காவல்துறை, வழக்கறிஞர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கும் வகையில் மிரட்டல் விடுத்த இது போன்ற குற்றவாளிகள் மீது காவல்துறையினர் இரும்புகரம் கொண்டு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.