Madurai HC: ஜல்லிக்கட்டில் ஒரு ரூபாய் கூட பணமாக பெறுவதில்லை - அரசு தரப்பில் உறுதி
அருண் சின்னதுரை | 13 Jan 2024 10:45 AM (IST)
ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி.
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் வசூல் செய்யப்படும் நன்கொடைகள் தங்க காசு வழங்குவதில் முறைகேடு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு ரூபாய் கூட பணமாக பெறுவதில்லை என அரசு தரப்பில் உறுதி. அரசு தரப்பின் உறுதி மொழியை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஊர்களிலும் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் ஜல்லிக்கட்டு வருகின்ற 15-ம் தேதி அவனியாபுரத்தில் துவங்க உள்ளது. ஜல்லிக்கட்டு வீரர்களை, காளைகளை ஊக்குவிக்கும் விதமாக வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் கார், இருசக்கர வாகனம் தங்க காசு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் பரிசு பொருட்கள் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் செய்து வருகின்றனர். இதே போல் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசு வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகிறது. கடந்த வருடம் வெற்றி பெற்றதாக கூறி ஒரு வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அது பின்னர் சர்ச்சையானது. இதேபோல் தங்க காசு வழங்குவதிலும் பல குளறுபடிகள் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காரணம் காட்டி பல கோடிக்கு பரிசு பொருட்கள் தங்க காசுகள் நிகழ்ச்சி ஒளிபரப்பு என பல்வேறு வகையில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உரிய ஆவணங்கள் கிடையாது உரிய கணக்குகள் கிடையாது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவை பொருத்தவரை அனைத்துமே அரசு தரப்பில் இருந்து செலவு செய்யப்படுகிறது. குறிப்பாக காவல்துறைக்கு கூட பாதுகாப்பு சம்பளம் என எதுவும் விழா குழுவினர் வழங்குவதில்லை. இந்நிலையில் பல கோடி ரூபாய் வசூல் செய்வதில் உரிய கணக்கு வழக்குகளை வருவாய்த்துறையினரும் கேட்பதில்லை. ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் இது போன்ற வசூலில் ஈடுபட்டு பரிசு வழங்குவதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே பரிசு பொருள்கள் வசூல் செய்வது பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளையும் நடவடிக்கைகளுக்கான கணக்கு வழக்குகளை வருவாய்த்துறை இடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வை நேர்மையாக நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விழா கமிட்டினர் யாரிடமும் எந்த ரொக்க பணமும் வசூல் செய்வது கிடையாது. மேலும் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் காவல்துறை காவல்துறை மூலமாக உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையான விழா கமிட்டினர் வசூல் முறைகேடு என்பது கண்காணிக்கப்பட்ட வருவதாகவும் யாரும் ரொக்கமாக எந்த நன்கொடையும் பெறுவதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் ஏதேனும் முறைகேடுகள் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றம் இதில் புதிதாக உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி உத்தரவு பிறப்பித்தனர்.