திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ்வடிவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வி.சித்தூர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம்தோறும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவது வழக்கம் இந்த கிரிக்கெட் போட்டியில் 25 அணிகள் கலந்து கொள்ளும் தேர்ந்தெடுக்கப்படும் 4 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டி ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி மாலை 6 மணி வரை நடத்த அனுமதி அளிக்க அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. மனு குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வி.சித்தூர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றி கிரிக்கெட் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதி, கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் மேலும் ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் 10-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 350 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2018ல் ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. பள்ளியைச் சுற்றி ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இரவு நேர காவலர்கள் இல்லாததால் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்துள்ளது.ஆய்வக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து, இரவு காவலரை நியமிக்கவும், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் பொருத்தவும், குடிநீர் மிஷின் ெபாருத்தவும், கூடுதல் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயசந்திரன் அமர்வு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.