விடுமுறை இறுதி நாள் கூட்ட நெரிசலை சமாளிக்க கோட்ட ரயில்வே மேலாளர் மதுரை ரயில் நிலையத்தில் நேரடி ஆய்வு.
கூட்ட நெரிசலை சமாளிப்பது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்தினர்
தீபாவளி பண்டிகை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது. தொடர் விடுமுறை இறுதி நாளில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே கூட்ட நெரிசலை சமாளிப்பது சம்பந்தமாக மதுரை ரயில் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அதிகாரிகளுடன் நேரடி ஆய்வு நடத்தினார்.
மதுரை கோட்டத்தில் 11 தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது...,” இன்று மதுரை கோட்டத்தில் 11 தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஒன்பது ரயில்கள் மதுரை வழியாக செல்கின்றன. இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஐந்து சிறப்பு ரயில்கள் மதுரை வழியாக செல்ல இருக்கின்றன. மேலும் மதுரை ரயில் நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் 60 ரயில்களும் கையாளப்பட்டு வருகிறது. மதுரை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணிக்க முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் மற்றும் ஒரு உதவி வர்த்தக மேலாளர் பணியில் உள்ளனர்.
பயண சீட்டுகள் வழங்க கூடுதல் கவுண்டர்கள் திறக்கவும் ஏற்பாடு
ரயில்கள் வருகை மற்றும் நடைமேடை குறித்த தகவல்களை உடனுக்குடன் பொது அறிவிப்புகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை உடனுக்குடன் சுத்தப்படுத்த கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைக்கேற்ப முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் வழங்க கூடுதல் கவுண்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அதேபோல திண்டுக்கல்லில் கோட்ட வர்த்தக மேலாளர், திருநெல்வேலியில் உதவி வர்த்தக மேலாளர் ஆகியோர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற முக்கிய ரயில் நிலையங்களில் வர்த்தக ஆய்வாளர்கள் கண்காணிப்பில் வருவதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது முது நிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் செஞ்சையா, உதவி வர்த்தக மேலாளர் பி.மணிவண்ணன், உதவி சுகாதார அதிகாரி சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.