*நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனுக்கு வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு*
*வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முத்து கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவர் செலுத்த வேண்டிய 43 லட்சத்தை வட்டியுடன் செலுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது*
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் தவமணி ஸ்டீபன் ஜெயராஜ். சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வருகிறார். தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் கிடைத்த தொகையை கொண்டு சொந்த ஊரில் நிலம் வாங்க முடிவு செய்தார். இதற்காக தனது பள்ளி நண்பர் முத்துகிருஷ்ணன் அணுகினார். அவர் பெயரில் நிலம் வாங்குவதற்கு முத்துகிருஷ்ணன் சம்மதித்தார். இதையடுத்து சிறுக சிறுக முத்துகிருஷ்ணன் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினார். ஆனால் அவர் அந்த தொகையை எடுத்து தவமணி பெயரில் நிலம் வாங்காமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பணம் சம்பாதித்தார்.
இந்த தகவல் தெரிந்தவுடன் தனது 1 கோடியே 25 லட்சம் ரூபாயை திருப்பித் தருமாறு முத்துகிருஷ்ணனிடம் தவமணி கேட்டார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக புகார்கள் எழுப்பப்பட்டன. பின்னர் 75 லட்ச ரூபாய்க்கு தங்களின் நிலத்தை தவமணி ஸ்டீபன் ஜெயராஜுகு பதிவு செய்து கொடுத்தனர். மீதமுள்ள 43 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அந்த காசோலை முத்துகிருஷ்ணன் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பாக 2013- ல் வள்ளியூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முத்து கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவர் செலுத்த வேண்டிய 43 லட்சத்தை வட்டியுடன் செலுத்துமாறும் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முத்து கிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்து வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை உறுதி செய்யக் கோரி தவமணி ஸ்டீபன் ஜெயராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், முத்து கிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தண்டனையை உறுதி செய்தும், 43 லட்சத்தை வட்டியுடன் செலுத்துமாறும் உத்தரவிட்டார். முத்துகிருஷ்ணன் தற்போது நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.