விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளராக விஜய நல்ல தம்பி இருந்து வந்தார்.
இவரிடம் தங்கதுரை என்பவர் டிரைவராக இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டில் தங்கதுரையின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித் தருவதாகவும் இதற்காக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தருமாறும் விஜய் தம்பி கேட்டுள்ளார். அதன் பேரில் நகையை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை விஜய நல்ல தம்பியிடம் தங்கதுரை கொடுத்துள்ளார். அந்த பணத்தையும் பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாகவும், வேலைக்காக பணம் கொடுத்ததை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அந்தத் தொகையை திருப்பி பெற்றுத் தருமாறும் மிரட்டல் விடுத்தற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கத்துரையின் மனைவி கிருஷ்ணவேணி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதே போல் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக விஜய நல்ல தம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மனுதாரருக்கு முன்ஜாமின் அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் ரப்பர் தோட்ட கழகத்தின் சார்பாக விடப்பட்ட ரப்பர் மரங்கள் ஏல அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
குமரி மாவட்டம் பூச்சிகாட்டுவிளையைச் சேர்ந்த எட்வின்துரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் அரசு ரப்பர் கழகத்தில் பதிவு பெற்ற ஒப்பந்தகாரர். குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இறுதி பால்வடிப்பு செய்து வெட்டி அப்புறப்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு 6.10.2022-ல் வெளியிடப்பட்டது. நான் டெண்டர் கேட்டு விண்ணப்பித்தேன். டெண்டர் நாளான 8.11.2022 அன்று காலை அனைத்து ஒப்பந்ததாரர்களும் தனித்தனியாக அரசு ரப்பர் கழகத்துக்கு அழைக்கப்பட்டனர். முன்னதாக ரப்பர் கழக சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன. பின்னர், ஒப்பந்ததாரர்கள் அனுப்பிய சீலிட்ட கவர் பிரிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்டப்பட்டிருந்து தொகைக்கு மேல் சுற்றளவு அடிப்படையில் ஒவ்வொரு மரத்துக்கும் ரூ.340 முதல் ரூ.460 வரை லஞ்சம் தருபவர்களுக்கு மட்டுமே டெண்டர் தரப்படும் என ரப்பர் கழக மேலாண்மை இயக்குனர் டிங்கர் குமார் தெரிவித்தார்.
இதை ரகசியமாக வீடியோ பதிவு செய்தேன்.நான் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நான் டெண்டர் விண்ணப்பத்தில் மரங்களுக்கு தலா ரூ.2710 மற்றும் ரூ.3520 என விலை குறிப்பிட்டிருந்ததை, நான் நஷ்டம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு 5.11.2022-ல் டெண்டர் வழங்கப்பட்டது.
இந்த தொகையை செலுத்தாவிட்டால் எனது முன்பணம் ரூ.8 லட்சம் பறிபோய்விடும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. எனவே, குமரி ரப்பர் கழகத்தின் 6.11.2022-ல் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பு, எனக்கு வழங்கப்பட்ட டெண்டர் உத்தரவை ரத்து செய்தும், டெண்டர் வழங்க லஞ்சம் கேட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி முறைகேடு குறித்த வீடியோ காட்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அரசு ரப்பர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற டெண்டர் நடவடிக்கை தடை விதித்து, முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.