குற்றாலம் பிரதான அருவி பகுதியில் உள்ள சிலைகளை புனரமைத்தல் எனும் பெயரில் அகற்றப்படுத்தவோ மாற்றவோ கோரிய வழக்கு
பொதுநல மனு தாக்கல்
மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "குற்றாலம் பிரதான அருவி பகுதியில் உள்ள சிலைகளை புனரமைத்தல் எனும் பெயரில் அகற்றப்படுத்தவோ மாற்றவோ இடைக்கால தடை விதிப்பதோடு, பழங்கால சிலைகளை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் இளந்திரையன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
குளிக்கும் இடத்தின் அகலத்தை அதிகரிக்கும் நோக்கம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில், " குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் இடத்தின் அகலத்தை அதிகரிக்கும் நோக்கில் மேம்பாட்டுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 75 ஆண்டுகள் பழமையான அலங்கார வளைவு அகற்றப்பட்டுள்ளது. பயணிகள் நின்று குளிக்கும் இடத்தின் அகலம் 3.6 மீட்டரில் இருந்து 8 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை கண்காணிப்பாளரின் கண்காணிப்பின் கீழே இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறையின் படி குற்றால பிரதான அறிவியல் இருந்த 65 குகை சிற்பங்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. 40% பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பணியை தொடர அனுமதி வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "வரலாறு, கலாச்சாரம் மற்றும் பழமை அடிப்படையிலான தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பது அரசின் கடமை. அந்த வகையில் குற்றாலம் பிரதான அருவிலுள்ள பழங்கால சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, வசதி, கூட்ட மேலாண்மை, சுற்றுலாப் பயணிகள், அவர்களை நம்பி உள்ள உள்ளூர் வாசிகளின் நலன், எளிதாக அணுகுதல் ஆகியவையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொடரலாம்
பொதுமக்களின் நலன் கருதியும், உள்ளூர் பொருளாதார வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இந்த மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, தொல்லியல் துறை அதிகாரிகளின் முன்னிலையில் குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொடரலாம். அருவியில் உள்ள சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை பொதுப்பணித்துறை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே சேதப்படுத்தப்பட்ட சிற்பங்கள் தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். குற்றாலம் பிரதான அருவியில் பழங்கால சிற்பங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்பாட்டு வசதிகள் முடிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதுவாக இருப்பதையும், உள்ளூர் பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
