எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம். 108 அவசர ஊர்தி ஓட்டுனர் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கு.
போலீஸ் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்
மதுரை 108 அவசர ஊர்தி ஓட்டுனர் இருளாண்டி மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டத்தில் "மக்களை காப்போம்" என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது வேலூர் மற்றும் திருச்சியில் அதிமுகவினர் 108 அவசரகால ஓட்டுனர் பணியாளர்கள் தாக்கப்பட்டு ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர், எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
வாதம்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் ஆஜராகி 108 அவசரகால ஊர்தி பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் அதற்கான உரிய வழிகாட்டுதலையும் உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் அனுமதி வேண்டாம்
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோட்டைச்சாமி ஆஜராகி. இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) தரப்பில் உரிய வழிகாட்டுதலை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அனுமதிக்கும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அது குறித்த பொது மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். சாலை ஓரங்களில் அல்லது பொது சந்திப்புகளுக்கு அருகில் கூட்டங்கள் நடத்தும்போது போதிய பாதுகாப்பு வசதிமற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களின் சிரமத்தைத் தடுக்கவும் போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடு
108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் மற்றும் காவல் மீட்புப் பிரிவுகள் உட்பட அனைத்து அவசரகால வாகனங்களும் தடைகள் அல்லது தடைகள் இல்லாமல் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மாற்று பாதைகளையும் சரி செய்து வைத்திருக்க வேண்டும். பொதுக் கூட்டங்களில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க சரியான தடுப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் செய்திருக்க வேண்டும். மேலும் மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெறுவது என்றால் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைகள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு முன்கூட்டிய தகவல் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
இந்த வழிகாட்டுதலை தமிழ்நாடு அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர் காவல்துறை ஆணையாளர் துணை ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு கண்டிப்பாக பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.