கம்பம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் 18 திமுக நகர மன்ற உறுப்பினர்கள், 6 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகராட்சி ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து தீர்மானம் மனுவை கம்பம் நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். கடந்த சில மாதங்களாகவே நகர்மன்ற தலைவருக்கும், நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஒற்றுமை இல்லாததால் பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்மன்ற கூட்டம் நடைபெறும் பொழுது எதிர்ப்பில் உள்ள 18 திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 24 நகரமன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதற்குரிய மனுவை நகரமன்ற ஆணையாளரிடம் அளித்தனர்.
மனு அளிக்கும் பொழுது 18 திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர் மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக மனு அளித்தனர். அனைவரும் ஒன்றாக இணைந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இது குறித்த மனு அளிக்க சென்றனர்.
அந்த மனுவில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வார்டு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நடத்துவதற்கு நகர் மன்ற தலைவர் ஏற்க மறுப்பதாகவும் மேலும் நகர் மன்ற தலைவரின் கணவர் தன்னிச்சையாக செயல்பட்டு நகராட்சி பணியாளர்களை கையில் வைத்துக் கொண்டு நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி அந்த மனுவில் கூறியுள்ளனர். நகராட்சியின் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.