மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு - ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
மதுரையில் பல்வேறு இடங்களில் கிராணைட் முறைகேடு
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மற்றும் கிழக்கு, வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல கோடி மதிப்பில் கிரானைட் குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி முறைகேடு நடைபெற்றது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விக்கிரமங்கலம் மற்றும் ஒத்தக்கடைக் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிபதி ரோகிணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அன்சுல் மிஸ்ரா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
அப்போது இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக இருந்த அன்சுல் மிஸ்ரா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து நீதிபதி ஐஏஎஸ் அதிகாரியான அன்சுல் மிஸ்ராவின் சாட்சியத்தை பதிவு செய்த நிலையில் அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப். 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ரோஹினி இந்த வழக்கின் மற்ற சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.