மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் 5 பேர் கைது - 17 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
60 வயது மதிக்கதக்க பெரிய யானை ஒன்றில் தந்தம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள போடி ஜமீன் குடும்பம். இதன் வாரிசான, வடமலை ராஜபாண்டியன் என்பவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள 60 வயது மதிக்கதக்க பெரிய யானை ஒன்றில் தந்தம் இருந்துள்ளது. இதனை மதுரை வளர் நகர் பகுதியில் வைத்து, விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி தலைமையிலான வனத்துறையினர் வளர்நகர் பகுதிக்கு சென்றபோது, யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக முகவர்களான மதுரை மற்றும் போடியை சேர்ந்த ரமேஷ், மதுரையை சேர்ந்த மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி ஆகிய 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
ஜமீன் குடும்ப வாரிசுதாரர் விற்பனை
பின்னர் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பெரிய யானையின் தந்தம் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட. சொகுசுகார், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். கைதான ஐவரிடமும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் போடி ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் மூலமாக யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட யானை தந்தம், கார் , செல்போன்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட முகவர்களில் ஒருவரான மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி ஆகிய நான்கு நபர்களையும் மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் -17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதனிடையே நூற்றாண்டு பழமையான யானை தந்தம் விற்பனை செய்த வழக்கில், போடி ஜமின் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.