மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் வைக்கப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான 12500 இலவச வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மதுரையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. மதுரை முக்கிய கடை வீதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க காலை முதல்  ஆர்வமுடன் வருகை தர தொடங்கியுள்ளனர். 

 


 



மேலும், கடைகளை தவிர சாலையோர கடைகளிலும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பொருட்களை மக்கள் வாங்கி செல்கிறார்கள். விடுமுறை நாட்களை போல் வேலை நாட்களிலும்  மதுரை மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொருட்களை வாங்கிசெல்கின்றனர். ஆடைகளின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டில் அதிகரித்து உள்ள நிலையிலும் விற்பனை அதிகரித்துள்ளது. அதே போல்  மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி இனிப்பு வகைகள் விற்பனையையும் துவங்கி சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் வைக்கப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான 12500 இலவச வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




 


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு தாலுகாவிற்கு சொந்தமான குடோனில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான இலவச வேஷ்டிகள் 125 பண்டல்களில் மூட்டைக்கு 100 வேஷ்டிகள் என 12500 வேஷ்டிகள் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  கூடுதலாக வேஷ்டிகள் வந்த நிலையில் அதனை வைப்பதற்காக குடோனை அதிகாரிகள் திறக்க முயன்றுள்ளனர். அப்போது பூட்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூட்டை சோதனை இட்டபோது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு புதிய போட்டு போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.








 

இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிப்பிலான 12500 வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வருவாய் துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநகர வடக்கு துணை ஆணையர்  தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 12500 வேஷ்டிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து  சரக்கு வாகனங்கள் மூலமாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கேமராக்கள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.




 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்ட பொங்கல் வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இலவச வேட்டி சேலைகள் வைக்கப்பட்ட குடோனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1500 வேஷ்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.