ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்வதாக கூறிய இடத்தினை சிப்காட் கையகப்படுத்த கோரிய வழக்கில், இந்த வழக்கு ஏற்புடையதல்ல. இதில் பொதுநலன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், “வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடம் சிப்காட் (SIPCOT) ஆல் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ளது.


வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை விற்பனை செய்யக்கூடிய அறிக்கையில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். சிப்காட்-டிற்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்தத்திற்கு அமைந்துள்ள நிறுவனம் அந்த இடத்தினை விற்பனை செய்ய முடியாது. மேலும் சிப்காட் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய நிலத்தை மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்வதாக கூறிய இடத்தினை சிப்காட் கையகப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு ஏற்புடையதல்ல. இதில் பொதுநலன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


 




மற்றொரு வழக்கு


நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக பின்பற்றாத கும்பகோணம் போக்குவரத்து நிர்வாக இயக்குனருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தும், அதனை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிதரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தமிழ்நாடு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தேன். என் மீது எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 9.2.2021 மற்றும் 5.3.2021 ஆகிய நாட்களில் 2 குற்றச்சாட்டு குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. 


இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி அதிகாரியிடம் முறையிட்ட போதும் எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் நிர்வாக இயக்குனர் இடத்தில் எனது குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யவும் அது குறித்து விளக்கம் அளிக்கவும் மேல்முறையீட்டு செய்தேன். ஆனால் எனது மேல்முறையீட்டு மனுவிற்கு விளக்கம் அளிக்காமல் நிராகரித்து விட்டனர். 


இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எனது மனுவை பரிசீலனை செய்யக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் மீண்டும் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இடத்தில் மனு கொடுத்தேன். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் கருத்தில் கொள்ளாமல் எந்த ஒரு காரணமும் கூறாமல் மனுவை மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டார். 


எனவே, என் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யவும், மேலும் குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி நான் அளித்த மனுவை ரத்து செய்து போக்குவரத்து நிர்வாக இயக்குனர் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்." என கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "அரசு தரப்பில், நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டதன் காரணமாகவே மனுதாரரின் மனுவை நிராகரித்து போக்குவரத்து நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முழுமையாக மன்னிப்பு கூறுவதாக கும்பகோணம் நிர்வாக போக்குவரத்து இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதனையடுத்து நீதிபதி, கும்பகோணம் போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் மனுதாரர் புதிய மனுவை அளிக்க வேண்டும். அதனை 2 வாரத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கும்பகோண போக்குவரத்து நிர்வாக இயக்குனருக்கு 5000 ரூபாய் அபதாரம் விதித்தும்  அதனை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.