புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியை சேர்ந்த சாலை பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், அஞ்சலிதேவி, சாலை மதுரம், குமார், அனுஷியா, விஜயசாந்தி, தங்கராஜ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 9 கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதிமுகவினரே பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிற கட்சியினை சேர்ந்தவர்கள் கூறும் நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மிரட்டல்கள் வருகின்றனர்.

 

ஆகவே, அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். அன்னவாசல் காவல் ஆய்வாளர் எங்களை தொல்லை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "பாதுகாப்பு கோரிய மனு காவல்துறையினரை சென்றடையாத காரணத்தினாலேயே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறதே? என கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், மின்னஞ்சல் வழியாகவும் மனு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி," 9 கவுன்சிலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 



மதுரை, மேலூர் தினசரி மார்க்கெட் கடைகளை ஏலம் விடுவதற்கு மேலூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

 

மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த மணவாளன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "மேலூர் தினசரி மார்க்கெட் 1991ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், 106 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட் 30 ஆண்டுகளாக மேலூர் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மற்றும் குடியிருப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டு இங்கு பொதுக்கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது அந்த கழிப்பிடம் கட்டிய நாளிலிருந்து தற்போது வரை பயன்பாடு இல்லாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் அடிப்படை வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் கடைகள் பாழடைந்த கட்டிடங்கள் வலிமை இல்லாமல் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக உள்ளது. 

 

இந்தச் சூழ்நிலையில் மேலூர் நகராட்சி ஆணையர் கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையைக் கண்டறியாமலும், ஆபத்தான கட்டமைப்பை இடிக்காமலும் 11.01.2022 ம் தேதியன்று மேலூர் தினசரி மார்க்கெடில் உள்ள கடைகளை ஏலம் விடுவதற்கு ஆணை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

எனவே, மேலூர் நகராட்சி ஆணையர் 11.01.2022 ஆம் தேதியன்று பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்யவும், உடனடியாக கடைகளை இழுத்து புதிய கடைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் கூறியுள்ளார்.

 

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.இதனையடுத்து நீதிபதி, மேலூர் தினசரி மார்க்கெட் கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மார்க்கெட்டில் உள்ள கட்டிடங்களை கிடைத்து புதிய கட்டிடங்கள் கட்டிய பின்பு ஏலம் விட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்