அரசுப் பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியர். கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியை தம்பதியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டினர்.


மதுரையின் மாணிக்கங்கள்


மதுரை தத்தனேரியைச் சேர்ந்த வத்தல் வணிகர் இராமச்சந்திரன் மதுரை திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். பத்ம ஸ்ரீ, தமிழறிஞர்  சாலமன் பாப்பையா  வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார். அதே போல் ஆயி பூரணம்மாள் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய நிலையில், மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை அதே பள்ளிக்கு தானமாக வழங்கினார். இப்படி மதுரையில் தெரிந்தும், தெரியாமலும் மதுரையில் விலை மதிக்க முடியாத மனித மாணிக்கங்கள் துளிர் விடுகின்றனர். இவர்கள் செய்யும் செயல் தங்களுக்கு சிறிய உதவியாக தென்பாட்டாலும், பலரது வாழ்க்கையில் ஒளியை பாய்ச்சுகிறது. இப்படியான சூழலில் மதுரை மேலூர் பகுதியில் அரசுப் பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

5 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளியா?


 

மதுரை மேலூர் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் - தமிழ் செல்வி தம்பதியினர். மதுரையில் கிரானைட் மற்றும் உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். அரசு நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கீழையூர் கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் கட்டடம் கட்டுவதற்காக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டு உள்ளது.

 

பள்ளிக்கு இடம் வழங்கப்பட்டது


வெகுதூரம் சென்று பள்ளி மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பது என்பது சிரமமான ஒன்று. இதை கருத்தில் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, அதே கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதியரிடம் அணுகியுள்ளார். தங்களுக்கு நிலம் வழங்க உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் மேலூர் திருப்பத்தூர் சாலையில் உள்ள ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 2.15 ஏக்கர் நிலத்தை  தம்பதியர் அரசு பள்ளிக்கு தானமாக வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் மேலூர் கிழக்கு சார்பதிவாளர் முன்னிலையில் நிலத்தை பதிவு செய்து கொடுத்தனர். அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியருக்கு கிராம பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியை செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

சேவை தொடரும்


 

இதுகுறித்து தம்பதியர் கூறும் போது, தாங்கள் பிறந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய போது, கல்விக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கு இந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளோம். தொடர்ந்து மருத்துவமனை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.