மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் - வரிவிதிப்புக்குழு தலைவரின் கணவர் உட்பட இருவர் கைது.

மதுரை மாநகராட்சியில் மோசடி
 
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்த சூழலில் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கட்டங்களுக்கு வரிகுறைப்பு செய்து மோசடி நடைபெற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 5 மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 நபர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில்கலெக்டர்கள் முதல் மேல் அதிகாரிகள் வரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வரிவிதிப்புக்குழு தலைவரின் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அதிகாரிகள் விசாரணை
 
மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவுபடி டி.ஐ.ஜி அபிநவ்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 8 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி 51-வது வார்டு திமுக கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான விஜயலட்சுமி,  96 வது வார்டு (ஹார்விபட்டி) ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர்  விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி விசாரணை நடத்தினர். 
 
கைது செய்யப்பட்டு விசாரணை
 
இதில் முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து செந்தில்பாண்டி கைது செய்யப்பட்டார். தேவையெனில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என விஜயலட்சுமியிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர். விஜயலட்சுமி ஏற்கனவே மண்டல தலைவர்களுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது கணவர் கண்ணனும் கைது செய்யப்பட்டார்.